வெண்ணிலா மஞ்சரி
(காலாண்டிதழ்)

வாசிப்பை மேம்படுத்துவதும், புதிய பல கவிஞர்களை உருவாக்குவதுமே எமது நோக்கம்

இப்போது வாசியுங்கள்
image
image
image
image
Profile Picture

வெண்ணிலா மஞ்சரி

பிரதம ஆசிரியர்:
எஸ். ஏ. கப்பார்


1978 எப்ரல் மாதம் 'வெண்ணிலா' கலை இலக்கியச் சஞ்சிகை மாத இதழாக உதயமாகி தொடர்ந்து 12 இதழ்கள் வெளிவந்தன. இச் சஞ்சிகையை அதன் ஆசிரியர் எழுத்தாளர் எஸ். ஏ. கப்பார் அவர்கள் காவியன் என்ற புனைப் பெயரில் நடாத்தி வந்தார். தவிர்க்கமுடியாத சில காரணங்களால் இடையில் நின்றுபோயிற்று.

மீண்டும் 43 வருடங்களின் பின் ஏப்ரல் 2021 இல் 'வெண்ணிலா கவிதை மஞ்சரி' என்ற பெயரில் காலாண்டிதழாக வெளியிடப்பட்டு தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமுள்ளன.

'வாசிப்பை மேம்படுத்துவதும், புதிய பல கவிஞர்களை உருவாக்குவதுமே எமது நோக்கம்' என்ற கருப் பொருளுடன் வெளிவந்துகொண்டிருக்கும் வெண்ணிலா கவிதை மஞ்சரியானது வளர்ந்துவரும் இளம் படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்து அவர்களின் ஆக்கங்களைப் பிரசுரித்து வரும் அதே வேளை மூத்த எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களைக் கௌரவப்படுத்தியும் வருகிறது.

இச் சஞ்சிகையில் அட்டைப்படக் கட்டுரை, அட்டைப்படக் கவிதை, மறைந்த இலக்கிய ஆளுமைகளின் இரங்கற் குறிப்புகள், புதிய வெளியீடுகள் சம்மந்தமான நூல் அறிமுகம், சிறப்புப் பார்வை, நூல் நயம், விமர்சனங்கள், சிறு கதைகள், அறிவியற் கட்டுரைகள், தடம் பதித்த மூத்த கவிஞர்களின் கவிதைகள், மஞ்சரி கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், படித்தவற்றில் பிடித்த கவிதைகள் என இன்னும் பல அம்சங்கள் இடம் பெறுகின்றன.

அண்மையில் 11-12-2024 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடாத்திய கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2024இல் 2022ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளிவந்த சஞ்சிகைகளில் வெண்ணிலா கவிதை மஞ்சரி சிறந்த சஞ்சிகையாகத் தெரிவுசெய்யப்பட்டு விருதும் பாராட்டும் பணப் பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இலவச அனுப்புதல்

100$-க்கு மேலான ஆர்டருக்கு

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பான கட்டணம்

24/7 ஆதரவு

எப்போது வேண்டுமானாலும் அழைக்கவும்

அப்பாவின் டயரி

உங்கள் மனதை நெகிழ்ச்சியூட்டும் "அப்பாவின் டயரி" படைப்பை வாசிக்க இன்றே உங்கள் பிரதியை பெற்றுக்கொள்ளுங்கள்.

info@vennilamanjari.com

புதிய புத்தகங்கள்

வாசகர்களின் கருத்துக்கள்

img

டீன் கபூர் அவர்களிடமிருந்து...

'அப்பாவின் டயரி' சிறுகதைத் தொகுப்பு.

கவிஞரும் சிறுகதை ஆசிரியரும் வெண்ணிலா சஞ்சிகையின் ஆசிரியருமான எஸ். ஏ. கப்பாருடையது அப்பாவின் டயரி. இத்தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன. இவை அவ்வப்போது தமிழன் வார இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.

சமூகப் பிரச்சினைகள், குடும்ப உறவுகள், வாழ்க்கையின் சிக்கல்கள் போன்றவை இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் மையங்களாகும்.

எழுத்தாளுமை எளிமையானதும் ஆழமானதுமாகும். வார்த்தைகளின் தெரிவு மற்றும் கதையாக்கம், வாசகர்களின் மனதில் கதைகளை நிலைத்துப் போக வைக்கும்.

இயல்பான உரையாடல்கள் யதார்த்தமானதாகவும், கதாபாத்திரங்கள் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் போல் உணர வைக்கின்றன.

img

கவிப்பொய்கை ஜவ்ஸன் அவர்களிடமிருந்து...

'அப்பாவின் டயரி' சிறுகதைத் தொகுப்பு.

மருதமுனையின் மூத்த எழுத்தாளர், கவிஞர் எனும் போர்வைக்குள் உள்வாங்கப்படும் இலங்கை வங்கி ஓய்வுபெற்ற முகாமையாளர், வெண்ணிலா கவிதை மஞ்சரியின் ஆசிரியர் எஸ். ஏ. கப்பார் எழுதிய அவரது முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். தமிழன் வாரவெளியீட்டில் வெளிவந்த 15 சிறுகதைகளின் தொகுப்பாகும்.

அவரது முதலாவது கவிதைத் தொகுதி 'நிலவு அவள்' ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பிரதியில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டவையாகவும் சமூக சிந்தனை, விழிப்புணர்வு, அறிவுசார்ந்த எண்ணக்கருக்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றன.

நூலாசிரியர் இங்கு கையாளுகின்ற மொழிநடை நிகழ்வுகள் கண்ணெதிரே தோன்றி மறைகின்ற விம்பத்தையும் பயன்படுத்துகின்ற சொற்றொடர்கள் இலேசான வாசிப்பு அணுகுமுறைக்கும் ஏற்ற விதத்திலும் இருப்பதனை ஒரு வாசகனாக என்னால் மிகத்தெளிவாக உணர முடிகிறது.

img

இன்ஷிறாப் நௌபல் அவர்களிடமிருந்து...

'அப்பாவின் டயரிக்கு என் இருதய டயரியிலிருந்து...'

கவிஞர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர் எஸ். ஏ. அப்துல் கப்பார் அவர்களின் 'அப்பாவின் டயரி' சிறுகதைத் தொகுப்பிற்கு என் சமர்ப்பணமாய் சில வரிகள்...

தமிழன் வார வெளியீடுகளில்
தாங்கள் பதித்த
பதினைந்து தடங்களை
தட்டி உரசிப் பார்க்க - அப்றானின்
தளிர்விட்ட புன்னகையோடு
தனித்துப் பரிசாய் கிடைத்தது
'அப்பாவின் டயரி'

இன்று...
துரோகத்தில் முதல் தொகுதியை ஆரம்பித்து
வெள்ளைத் தம்பி நாநாவின்
வற் வரி பிரச்சினை வரை
சிறுகதைகளை
சிலந்தி வலை போல்
சிவந்த மெதுமை வரிகளால்
சிறப்பாக பின்னியிருக்கின்றீர்கள்...

img

ஏ. எஸ். சித்தி மிஸ்ரியா அமீன் அவர்களிடமிருந்து...

அப்பாவின் டயரி ரசனைக் குறிப்பு.

கிழக்கிலங்கை மருதமுனையைச் சேர்ந்த, சிறுகதை எழுத்தாளரும் வெண்ணிலா சஞ்சிகை ஆசிரியருமான இலங்கை வங்கி ஓய்வு நிலை முகாமையாளர் எஸ் ஏ அப்துல் கப்பார் அவர்கள் எழுதிய அப்பாவின் டைரி எனும் அருமையான சிறுகதை தொகுப்பு நூலை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது.

1977 முதல் இலக்கியவானில் பவனிவரும் கப்பார் அவர்கள் சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட, நல்ல படிப்பினை தரும் உணர்வு பூர்வமான 15 சிறுகதைகளை அப்பாவின் டயரியில் தந்திருக்கிறார்.

img

ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களிடமிருந்து...

அன்புத் தம்பி, அஸ்ஸலாமு அலைக்கும்.

வெண்ணிலாவின் முக்கிய பக்கங்களை மருமகன் நியாஸ் அனுப்பி இருந்தார். மிகச் சிரத்தையோடு என்னைப் பற்றிய குறிப்புகளைப் பதிவிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி. இறையருளால் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் எனது படைப்பு முயல்வுகளுக்காக நான் கண்டுகொள்ளப் பெற்றாலும், அதிக அளவில் இலக்கிய வாதிகளைக் கொண்ட எனது பிறந்த மண் என்னைக் கண்டு கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எனக்கிருந்தது. கடந்தமுறை நான் மருதமுனைக்கு வந்தபோது அல்மனார் தந்த வரவேற்பு என்னை மகிழ்வித்தது. தற்போது நீங்கள் உங்கள் சஞ்சிகை மூலம் என்னைக் கௌரவித்துள்ளீர்கள்.

இது எனது வாழ்வில் மறக்கவொண்ணா நிகழ்வாகும். ஏற்கனவே மல்லிகை, ஞானம், மாருதம், ஜீவநதி, இந்தியாவின் இனியதிசைகள் போன்ற சஞ்சிகைகள் என்னை அட்டைப்பட அதிதியாக் கௌரவித்திருந்தாலும் எனது மண் தந்த கௌரவம் உயர்வானது. நான் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். ஆயிரம்தான் நான் வெளியில் வாழ்ந்தாலும். நானொரு மருதமுனையான் என்பதை மறந்ததில்லை. அதனை நான் எனது வாத்தியார் மாப்பிள்ளை காவியத்தில் பதிவிட்டுள்ளேன். வெண்ணிலாவில் எனக்கான கவிதையை எழுதிய கவிஞர் தம்பி மருதூர் ஹஸன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரித்துவிடுங்கள். தொடர்ந்தும் வெண்ணிலா வெளிவர எனது பிரார்த்தனைகள். வஸ்ஸலாம்.

img

அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களிடமிருந்து...

கிடைக்கப் பெற்றேன்!

மருதமுனையிலிருந்து வெளிவரும் வெண்ணிலா காலாண்டு சஞ்சிகையின் 16 வது இதழ் கிடைக்கப் பெற்றேன். 84 பக்கங்களுடன் வந்திருக்கும் இந்த இதழில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கியிருக்கின்றன. அண்மையில் மறைந்த வேதாந்தி nஷய்கு இஸ்ஸதீன், மு.பொன்னம்பலம், காத்தான்குடி பௌஸ் ஆகியோர் பற்றிய இரங்கல் குறிப்புகளும் மருதூர் ஜமால்தீனின் திருப்பம், எம்.ஏ. மாஹிறாவின் மனதின் மாயம், எஸ்.ஏ. கப்பாரின் அப்பாவின் டயரி ஆகிய நூல்கள் பற்றிய நூல் நயக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

எச்.டி.எச். பஹ்தா எழுதிய வலியால் நனைந்த விழி, நயீமா சித்தீக்கின் உம்மா சும்மா இல்லை, கிண்ணியா சபீனாவின் தடம் மாறாப் பயணம் எஸ்.எச்.சித்தி மிஸ்ரியா அமீனின் மறுமணம் ஆகிய சிறுகதைகள் உள்ளடங்கியிருக்கின்றன. அத்துடன் 60 ஆம் பக்கத்திலிருந்து 79 ஆம் பக்கம் வரை கவிதைகள் உள்ளன. கவிதைக் காலாண்டிதழாக வெளிவரத் தொடங்கிய வெண்ணிலா இடையில் பொதுவான இலக்கிய சஞ்சிகையாகத் தன்னை மாற்றிக் கொண்டது. ஆயினும் அட்டைப் படத்தில் வெண்ணிலா கவிதை மஞ்சரி என்று இடம்பெற்றிருப்பதை நண்பர் கப்பார் அவதானிக்க வேண்டும்.

img

ஏ எம் கஸ்புள்ளா அவர்களிடமிருந்து...

வெண்ணிலா மஞ்சரி 09-01-2025 திகதியன்று என் கையில் கிடைத்தது. மகிழ்ச்சி கொண்டேன். இதழாசிரியர் எஸ் ஏ கப்பார் அவர்களுக்கு மனமுவந்த வாழ்த்துகள்.

இம்முறை அதிக விடயங்களை தாங்கி அதிக பக்கங்களுடன் சிறந்தவொரு இலக்கிய ஆளு மையை முன் அட்டையில் பிரசுரித்து இலக்கிய உள்ளங்களுக்கு இன்பமளித்துள்ளது.

பலரும் போற்றும் ஒருவரை நம் மண்ணில் போற்றுதல் சிறப்பாகும். அதனை செய்துள்ள வெண்ணிலா வளம் பெற வாழ்த்துவோம்.